Saturday, August 03, 2013

வானமே எல்லை

சென்றவாரம் சிங்கப்பூரில் பறவைகள் பூங்காவுக்கு விஜயம். எத்தனை அழகான இடம்.. பச்சைப் பசேலெனும் மரங்கள் சூழ் வனத்திலே பறவைகளின் கூவல் செவிக்கு இன்பமாக கேட்க வெகு நிசப்தமாக இப்படியும் ஒரு பறவைகள் வாஸஸ்தலமா என்ற ஆச்சரியத்துடன் ‘கிளிகள் பூங்கா’வுக்குள் சென்று வண்ண வண்ணக் கிளிகளுடன் உல்லாசமாக விளையாடும் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து அவர்கள் உற்சாகத்தில் பங்குபெறும்போதுதான் இந்த விசித்திரத்தைப் பார்த்தேன்.. இதோ செந்தமிழில் என் பார்வையையும் உணர்ச்சிகளையும் விசித்திரத்துடன் கலந்து கவிதையாய் கொடுத்துள்ளேன்.

அழகெல்லாம் அங்கேயே சேர்ந்திருந்தும் எவ்வித
ஆரவாரமுமில்லா அகன்றதோர் அமைதிப் பூங்காவாம்
அண்டம் இவ்வட்டவடிவம் தானோவென வியக்கவைக்கும்
அழகுப்பெட்டகமாய் உயரமாய் வலைக்கூடாரங்களாம்
ஆங்கொரு வலைக்கூடாரத்தில் பத்துப்பதினாறு மரங்களாம்
ஆங்காங்கே பொந்துகளும் சந்தமொழி பேசும்
வண்ண வண்ணக்கிளிகளாம். படபடவென சிறகை
விண்ணதிர அடித்து கண்ணெதிரே காட்டும்
அதிசயக்கிளிகளாம் பார்க்கப் பார்க்க ஆனந்தம்
ஆண்டவனின் அற்புதங்களில் இப்படியும் ஒன்றா
இவை கிளிகள்தானோ இல்லையில்லை கொஞ்சி
இசைபாடும் இன்பப் பிறவிகளோ இன்னுயிரோ
சென்றுபோன பிறவிகளின் தவப்பயனோ செல்வமோ
என்றெல்லாம் மதிமயங்கி மனதுக்குள் மகிழ்ச்சியாய்
எத்தனை பிறவிகள்தான் புவியில் இருந்தென்ன
எத்தனை பறவைகள்தாம் வானில் பறந்தென்ன
உன்னதக் கிளிபோல ஒருபிறவிதான் உண்டாமோயென
உள்ளத்திலே எண்ண அலைகளில் நனைந்தபோது
ஓரத்திலே ஓர்வலைப்பகுதி ஓர்வண்ணக்கிளி என்
எண்ணங்களைக் கலைத்ததை என்னென்று சொல்வேனோ
செஞ்சாந்துக் குழம்பில் குளித்ததோ சிவந்தமாதுளையோ
செவ்வளரி மலரோ செந்தாமரையோ எனச்சிவக்கும்
செக்கச் செவேலென்ற சிவப்புக்கிளியொன்று தன்
வளைந்த அலகினை அந்தவட்ட வடிவத்து
வலைப்பகுதியின் இரும்புக்கம்பிகளை இளைக்கவைக்கும்
வேகத்தில் களைப்பில்லாமல் மோதியது கண்டேனே
இதயந்துடித்ததே அடடா ஈதென்ன செய்கை
இளங்கிளியே இன்னிசைபாடும் வாயை இப்படி
இடித்துக்கொண்டு இரும்பு வலையை பிரிப்பானேன்
ஏனிந்தப் போக்கு என மனத்துள்ளே நினைத்தாலும்
இளங்கிளிக்கு நம்மொழிதான் பழக்கமாயிற்றேயென
கிள்ளைமொழியாம் தமிழில் ஏக்கமாய் கேட்கலானேன்

சிவந்த செல்லக்கிளியே! என்னிச்சைக் கிளியே!!
பவள வாய் திறந்து சொல்வாய் கிளியே!!
பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல்தானே
பழகும் இடமெல்லாம் பச்சிளங்கிளிகள்தானே
உன்கூட்டம் உன்னுறவு உன்சுற்றம் அத்தோடு
உன்னன்பு மனையாளும் அவள்பெற்ற செல்வமும்
பொன்னிறத்து மானிடரின் அலுக்காத செய்கையினால்
என்னாளும் எப்பொழுதும் உனக்காக்கிய நல்லுணவும்
இத்தனையும் உனக்கிருக்க அதுவெல்லாம் வேண்டாமல்
கள்ளனைப்போல் பார்வை கொண்டு கடுங்கோபம்
தாளாமல் பவளநிற நாசியோடு பரபரத்து
ஏணிப்படிப் போல வானுயர்ந்த இரும்புவலையை
ஏனிப்படி கொத்துகின்றாய்.. வலிக்காதோ உன்வாய்
கல்நெஞ்சமும் கலங்குமே காரணத்தைக் கேட்கின்றேன் 
சொல்லாயோ கிளியே என் செல்லக்கிளியே

வண்ணக்கிளி எனைப் பார்த்து முறைத்தது
என்ன நினைத்ததோ என்னருகே வந்து
என்தோளிலே தலைதேய்த்து செவியருகே கூவியது
மானிடர்பலர் வருவர் பார்ப்பர் போவர்
ஏனோதானோவென ஏதோ உணவு கொடுப்பர்
தேனாய் என்குரல் இனிக்குதாம் என்பர்
ஆனால் நீயோ உண்மைக் காரணம் கேட்டு
எனைப் பேசவைக்கின்றாய் சொல்கிறேன் கேள்!
பொழுதுக்கு உணவும் பேசுவதற்கு உறவும்
பொழுதுபோனால் உறங்க ஓரழகான இருப்பிடமும்
ஏராளமிங்கே இதில் எமக்கென்றும் ஐயமில்லை
தாராள மனதுடையோர் அதிலும் குறையில்லை
புழுபூச்சி தொல்லையில்லை வல்லூறு பயமில்லை
பொழுதுக்கும் எமைக்காக்க காவலர்கள் பலருண்டு
நன்றாகவே எல்லாமும் எம்முன்னே இருந்தாலும்
நன்றாக நினைத்துப்பார் இதுவே யாம்வேண்டுவதா?

ஆண்டவன் படைப்பில் ஆயிரம் அதிசயம்
ஆனாலும் உண்மையொன்று உண்டு அறிவாயோ
எப்பிறவி வாய்க்கினும் ஒவ்வொரு பிறவிக்கும்
அப்பிறவிக்கேற்ற தனித்துவம் எனவொன்று உண்டு 
மானிடனாய்ப் பிறந்தீர் புத்தியும்சித்தமும் பெற்றீர்
ஊனுடம்பு காக்கும் விதமும்வித்தையும் கற்றீர்
அகிலமும்போற்ற அனைத்தையும் அடக்கி ஆண்டீர்
ஆள்வது மனிதரின் பிறப்புரிமை என்பதுபோல
பறவைகளாம் எங்களுக்கும் பிறப்புரிமை ஒன்றுண்டே
சிறகடித்து சிந்தனையே இல்லாமல் வெட்டவெளிப்
பொட்டலிலே சுதந்திரமாய் பறப்பதுபோல் சுகமொன்றுண்டோ
கட்டழகுக் காதலியுடன் துணைசேர்ந்து பறக்கவேண்டாமா
வான்வெளியிலே திரிந்து விளிம்பினைத் தொடவேண்டாமா
வானவர்க்கும் மானிடர்க்குமிடையே பாதை போடவேண்டாமா
காற்றினிலே கானம்பாடி காதல்செய்ய வேண்டாமா
கொட்டும் மழைநீரோடு ஒன்றாய்க் கலந்திடவேண்டாமா
இயற்கையோடு இயைந்து  வாழ்வதுதான் வாழ்வாகும்
செயற்கையான இக்குடிலில் இருப்பதுவும் ஒருவாழ்வோ
சுதந்திரப்பறவைகள் என்பார்களே எம்மை மனிதர்கள்
சுதந்திரமாக இருப்பதுதான் பறவைகளின் பிறப்புரிமை
பிறப்புரிமை பறிக்கப்பட்டால் பிறவியெடுத்த பயனென்ன
இறந்தாலும் இறப்பேன் இக்குடிலில் நான்வாழேன்
அதற்கான போராட்டம்தான் தினம்தினம் செய்கின்றேன்
முதற்கண் இவ்வலையைக் கிழித்து வழிவிடுவாயோ
சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிவகைச் செய்வாயோ

தங்கக்கிளி என்னங்கத்தில் நடைபோட்டு சொன்னகதை
தாங்கொணாத் துயரத்தைத் தந்ததுதான் மிச்சம்
தனிமனிதனாய் வந்ததல்லாமல் விருந்தினனாய் நின்றதும்
இனியமொழிபேசும் இக்கிளிக்கு எப்படித்தான் புரியவைப்பேன்
எண்ணத்தில் பரிதாபம் ஏகமாகவே எழுந்ததுதான்
வண்ணக்கிளியே என்நிலைமை நீயறியாய் ஆனாலும் 
முயற்சி திருவினையாக்கும் என்றாவது ஓர்நாளென
முன்னொருநாள் எம்மூத்தோன் சொன்ன வழிவகையே
உனக்கும்நான் சொல்வது முயன்றுகொண்டே இரு!
என்றாவது ஒருநாள் கண்டிடுவாய் சுதந்திரத்தை’..
வெற்றிவேலன் துணையிருக்க உன்முயற்சி அதிவிரைவில்
வெற்றிபெற வாழ்க வாழ்கவென வாழ்த்திடுவேன்’!!

சொல்லிவிட்டு ஏக்கத்துடன் கிளியை விடுவித்தேன் 
சொல்லியது அக்கிளியும் சுதந்திரம் சுதந்திரமெனவே
சொல்லிவிட்டு சர்ரென்று பறந்தது வலையருகே
அலகைக் கூறாக்கி மோதியது அவ்வலையை
வாழ்நாளிலே ஓர்நாள் வலைவீழ்ந்திடும்போது கிளிகூவும்
வாழ்கசுதந்திரம் வானமே எல்லையென மகிழ்ச்சியோடு.