Monday, June 25, 2012

ஏடு தந்தானடி இறைவன் - 4 (ராஜராஜனும் தேவாரமும்)



This is India’s Deep South, a land of emerald green rice fields and immense palm forests, where every few miles temples soar toward the heavens in the countryside. Truth or fiction, the stories of Mysteries of Asia will amaze and delight. we are transported to this exotic land and examine the mysteries behind (Michael Bell, Mysteries of Asia)

தென்னகத்து அதிசயங்களை, அதுவும் ஒரு தஞ்சைத் தரணியின் அதிசயங்களைக் கண்டு கொள்கையில் இப்படித்தான் அவை நம்பமுடியுமா, மர்மங்களா என்று கேட்டு தன் வீடியோ காட்சிகளைத் தொடங்குகிறார் திரு மைக்கேல் பெல். இவர் தென்னகத்துக் கோயில்களை உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற மேற்கத்திய சிந்தனையாளர். தஞ்சையிலே கட்டப்பட்டு இருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகப் பெரிய அதிசயமாக இவருக்குப் படுகிறது. அதைப் போல கிராமத்துக்கு கிராமம் கோயில்களாக இருக்கும் அந்தப் பூமியும் இவர் கண்ணுக்கு அதிசயமாகப் படுகிறது.

அப்படிப்பட்ட அதிச்யத்திலும் அதிசயமாக இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணை ஆண்ட ராஜராஜசோழனை ஒரு நிகழ்வு கவர்ந்து கொள்கிறது. அதுதான் திருநாறையூரில் உள்ள அந்தணச் சிறுவர் நம்பியின் வேண்டுகோளின்படி அங்கே கோயில் கொண்ட பொள்ளாப்பிள்ளையார் அரசர் கொண்டுவந்த அத்தனை வாழை, கரும்பு, பதார்த்தங்களை நிவேதனமாக எல்லோர் முன்னிலையிலும் உண்டது. இது அதிசயம்தானே.. நைவேத்தியம் என்று கடவுளுக்கு வைத்து விட்டு மனிதர் உண்பதுதானே வாடிக்கை.. , நம்பி ஆண்டார் நம்பி என பிற்காலத்தில் சிறப்பாகப் பேசப்படப்போகின்ற ஒரு சாதாரண பக்தன் தாம் உளமாறத் தரும் நிவேதனத்தினை ஆண்டவன் ஏற்றுக் கொள்கிறான் என்பதே இந்த உலகாயுத இயற்கைக்கு மாறுபாடான விஷயம். , ,ஆனால் இந்த அதிசயம் நம்பிக்கு புதிதல்ல என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதனால், விஷயம் கேள்விப்பட்ட ராஜராஜன் அங்கே பெரும் நிவேதனப் படையலுடன் வருகிறான். அவன் நம்பியைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நம்பி திருப்பி தன்னை ஆண்டுகொண்ட பொள்ளாப்பிள்ளையாரை வேண்ட அனைவரும் வேடிக்கைப் பார்க்க அத்தனை பண்டங்களையும் பொள்ளாப்பிள்ளையார் ஏற்றுக்கொள்கிறார்.


முற்காலங்களில் நம்பிக்கைகளின் பலன் வீண்போனதாக சரித்திரம் இல்லை. உலகமே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. இப்போதும் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு சிரமம் என்று வரும்போது ஆன்மீகவாதிகளைத்தான் நாடுகிறார்கள். அதிசயம் நிகழ்த்தியவர் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்துவிட்டால் போதும், அவரைச் சுற்றி பெருங்கூட்டம் கூடும். மேலும் மேலும் அதிசயத்தைக் காண ஆர்வம் கூடும். இது பாரதத்தில் காலம் காலமாக நடந்துவரும் சாதாரண விஷயம்தான்.

ஆனால் ராஜராஜனோடு எந்தக் காலத்து அரசியல் தலைவனையும் ஒப்பிடமுடியாது. அது இமயமலையோடு பொடிக்கல்லை ஒப்பீடு செய்ததற்கு ஒப்பாகும். முதலில் தன்னலம் இல்லாதவன். எந்த விஷயத்திலும் பொதுநலம் பார்ப்பவன். எதிர்காலத்தில், அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு எல்லோருக்கும் அவை உபயோகப்படவேண்டும் என்று விரும்புபவன். தெய்வீகத்தில் பெருநம்பிக்கை வைத்தவனானாலும் கண்ணெதிரே இப்படி ஒரு அதிசயமான விஷயத்தைப் பார்த்த ராஜராஜன் நம்பிகளிடம் இன்னுமொரு கோரிக்கை வைக்கிறான். அவனுக்கு தேவாரம் பற்றிய முழுவிவரங்கள் வேண்டும், எல்லாப்பாடல்களும் வேண்டும், மூவர் பாடிய அத்தனைப் பாடல்களும் சிதறிக்கிடக்கின்றன. அத்தனையும் ஒழுங்காக வேண்டும். எத்தனைப் பெரிய மனசு பாருங்கள் அவனுக்கு!

அதே சமயத்தில் தேவாரப்பாடல்கள் சிதறித்தான் கிடக்கின்றன. மூவர் முதலிகள், சென்றது பாடியது எத்தனையோ கோயில்கள்..எவ்வளவோ பாடல்கள் ஏற்கனவே ஆங்காங்கே சிவன் கோயில்களில் பாடப்படுகின்றனதான்.. மூவர் சென்ற கோயில்களிலெல்லாம் தொடர்ந்து பாடி வருவதற்கான வழிவகைகள் ஏற்கனவே உண்டுதான். எல்லாப் பாடல்களும் முழுமையாக, முறையாக அப்படிப் பாடப்டுவதில்லையே.. அதன் மூல ஓலைகள் இருக்கவேண்டுமே.. திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஓலையில் எழுதிவைத்துள்ளார் என்பதை முன்னமே பார்த்தோம். அதைப் போல எத்தனையோ பக்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதியிருக்க வேண்டுமே.. அவை எங்கே போயின? எங்கே போய் தேடுவது?

மொத்தம் எத்தனை பாடல்கள் பாடினரோ, இப்போது ஒவ்வொரு கோயிலில் பாடும் பாடல்கள் பதிகங்களாக, பெயருக்கேற்ற பத்துப் பாடல்களாக் அத்தனைக் கோயில்களிலும் பாடுவதில்லை என்று ஏற்கனவே ராஜராஜன் திருவாரூர் கோயில் தியாகேசர் சன்னிதியில் தெரிந்து கொண்டதை விளக்கினோம். ஆனால் அவையாவும் பதிகங்கள்தானே.. முறையாக பத்துப் பாடல்களும் கிடைக்கவேண்டும் இல்லையா.. ஒவ்வொரு பதிகத்துகும் இரண்டு அல்லது மூன்று என இருந்தால் மீதம் எங்கே போயின? இந்தக் கோயில்கள் தவிர பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடல்கள் பாடியிருப்பார்களே அவை எங்கே.. அது சரி, மொத்தம் எத்தனை பாடல்கள்..இந்தக் கேள்விகளுக்கு விடை எப்படி கிடைக்கும்.. ஈசுவர அனுக்ரஹத்தால் மட்டுமே இந்தக் கேள்விக்கு விடை காண இயலும் என்று தெரிந்துகொண்ட மாமனிதன் ராஜராஜ சோழன் இந்த தெய்வீக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருநாறையூர் நம்பி மூலமாக பிள்ளையாரிடம் கேட்கவைத்தான். ஆனால் கிடைத்த பதில் ஆனந்தத்தோடு அதிர்ச்சியையும் கொடுத்தது. ..


தேவாரம் தொகுக்கப்பட்ட முறையைப் பற்றி சைவ ஆச்சாரியர் உமாபதி சிவம் திருமுறை கண்ட புராணத்தில் பேசுகையில் திருஞானசம்பந்தர் பதினாராயிரம் பாடல்களையும், அப்பர் சுவாமிகள் நாற்பத்தொன்பதாயிரம் பாடல்களையும் சுந்தரமூர்த்தியார் முப்பத்து ஓராயிரம் பாடல்கள் பாடியதாக பொல்லாப் பிள்ளையார் மூலம் விவரம் அறிந்ததாக குறித்துள்ளார். ஆக மொத்தப் பாடல்கள் 96000 – அதாவது ஒரு லட்சம் பாடல்களுக்கு நான்காயிரம் குறைவு.. இத்தனை பாடல்களும் ஓலைகளில் எழுதப்பட்டு தில்லை திருச்சிற்றம்பலத்தில் திருச்சுற்று அறைகளில் ஒரு மூடிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. செல்க’ எனப் பொள்ளாப்பிள்ளையார் பணிப்பதாகவும் திருநாறையூர் நம்பியும் ராஜராஜனும் தில்லை விரைவதாகவும் உமாபதிச் சிவம் பாடுகிறார். ஆனால் அங்கே பாடிய மூவர் அனுமதியில்லாமல் அந்தக் கதவு திறக்காது எனத் தெரிந்ததும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநாவலூர்சுந்தரர் திருவுருவச் சிலைகளைச் செய்ப்பித்து பூசித்து அவர்களை ஊர்வலமாக அழைத்துவந்ததும் அவர்கள் முன்னிலையில் கதவு திறக்கப்படுகிறது. திறந்த அறையில் பெரும் புற்றுக்குள் தொண்ணாற்றாயிரம் ஓலைகள் சிதைந்த நிலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். இதுவரை செய்த பிரயத்தனங்களெல்லாமே வீண்.. தொண்ணூற்றாயிரம் பாடல்களில் பத்து சதவீதத்துக்கும் கீழ்தான் முழுமையான ஓலைக்கட்டுகளாகக் கிடைத்தன.. ஏனைய அனைத்தும் புற்றெறும்புக்கு இரையாகிப்போயின. கலங்கிப் போன இருவருக்கும் ஆறுதலாக அசிரீரியாக வந்த இறைவன் குரல் கேட்டது.. ”எது காலத்துக்குத் தேவையோ அவைகள் மட்டும் உள்ளன.. இவை போதும்’ என வந்த குரலால் சமாதானமடைந்தனர்.

இந்த அசிரீரி என்ற விஷயம் பற்றி ராஜசிம்ம பல்லவன் கட்டிய கைலாசநாத கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது பூசலார் தம் மனதுக்குள் கட்டி வரும் ஆலயம் பற்றிய திருக்குறிப்பாக ராஜசிம்மபல்லவன் தனக்கு எப்படி அசிரீரி வாக்கில் இறைவன் வந்து பூசலநாயனார் திருக்கோயில் குடமுழுக்கு முதலில் நடக்கட்டும்’ என தெரிவித்ததாக கல்வெட்டில் பொறித்துள்ளான்.

”துஷ்யந்த ப்ரமுகைஹி ச்ருதா அம்பரகதா வாணீ ஸரீரம் வினா” என ஆரம்பிக்கும் இந்த நான்கு வரி ஸ்லோகம் போல உள்ள இந்தக் கல்வெட்டுக்குக்கு டாக்டர் நாகசாமி உரை கொடுத்துள்ளார்.

”க்ருதயுகத்திலே ஆண்ட அரசரர்கள் துஷ்யந்தன் போன்ற பேரரசர்கள். அவர்களும் அரசர்கள்தான் அவர்கள் ஆண்ட யுகம், நல்லதே நிறைந்து நின்ற க்ருதயுகம்.அவர்கள் ஆண்டது மட்டுமல்ல, பெரும் ஆற்றல் படைத்தவர்கள். நினைத்தால் தேவலோகம் சென்று விடமுடியும். தேவர்களை நேர்முகமாக பார்க்கமுடியும். தேவர்களோடு நேர்முகமாக பேசமுடியும். அது மட்டுமின்றி, உயர்ந்த தவ முனிவர்கள் எல்லாம் கூட அவர்களை போற்றுகின்ற அளவிற்கு உயர்ந்த குணம் படைத்தவர்கள். அப்பேர்ப்பட்ட துஷ்யந்தனுக்கு ஒரு அசரீரி கேட்டது. சரீரம் இல்லாத தேவலோகத்திலிருந்து ஒரு ஒலி கேட்டது என்று பண்டைய காலத்து வரலாறு கூறுகிறது. அதில் என்ன ஆச்சர்யம். க்ருதயுகத்திலே ஆள்கின்ற ஒரு அரசன், அனைத்து மங்களங்களையும் பெற்றவன், தேவர்களை நேர்முகமாக பார்க்க்கூடிய ஆற்றல் படைத்தவன். முனிவர்களாலே போற்ற பட்டவனுக்கு அசரீரி கேட்டது என்றால் அது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால் நல்லது என்பதே இல்லாது எங்கோ ஓடி ஒளிகின்ற இந்த கலியுகத்திலே, இந்த கோயிலைத் தோற்றிவித்த அரசனுக்கு அசரீரி கேட்டது என்றால், அது வியக்கத்தக்கது அல்லவா!”

அன்று, அதாவது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்மபல்லவனுக்கு ஏற்பட்ட இந்த இறை அனுபவம் ராஜராஜசோழனுக்கும் அன்றைய தினம் ஏற்பட்டது.

புற்று மூடிய நிலையில் செல்லரித்து அழிந்த பதிகங்கள் போக நமக்குக் கிடைத்ததோ வெறும் 8250 தான். திருஞான சம்பந்தரின் 4158 பாடல்களும், திருநாவுக்கரசரின் 3066 பாடல்களும், சுந்தரமூர்த்திகளின் 1026 பாடல்களும் இதில் அடங்கும். ஆனால் இப்படி இறைவன் அருளால் கிடைத்த பாடல்களில் ஒரு சில பாட்டுகள் தவிர்த்து அனைத்துமே பதிகப் பாடல் முறைதான். அதாவது ஒரே தலத்தில் பாடப்பட்ட பத்துப் பாடல்கள் முறையில்தான் தொகுக்கப்பட்டது. சரி, எது இவ்வுலகுக்குத் தேவையோ, எந்தந்தப் பாடல்களால் கடந்த கால நிகழ்வுகள் வரலாற்றாக தெரிவிக்கப்படுகின்றதோ, எந்தந்தப் பாடல்கள் இந்த மானிட உலகத் துயரங்கள் தீர்க்கப்படுகின்றதோ அந்தப் பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்
வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்
ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும் துன்னவகை
ஏழாகத் தொகுத்துச் செய்தான் (உமாபதி சிவம் -திருமுறை கண்டபுராணம்)



நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்படுகின்றன. திருப்பதியப்பாடல்கள் திருமுறை செய்யப்படுகின்றன. அவைகள் மிகச் சீரான திட்டத்துடன் ஒவ்வொரு கோயிலுள்ளும் வழிபாட்டுக்காக வைக்கப்படுகின்றது. மூவர் சிலைகள் ஏராளமாகச் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இதுவரை கோயில்களில் ஒரு வழிபாட்டுப் பாடலாக மட்டுமே பாடப்பட்டு வந்த திருப்பதியப் பாடல்கள், அந்த முறையினின்று மாறி பூசை விதானமாக ஆக்கப்பட்டது. யார் பாடவேண்டும், எப்படிப் பண்ணோடுப் பாடவேண்டும், இந்தப் பாடல்களுக்கு என்னவகை இசைக் கருவிகள் பாடலுக்குத் தோதாக உபயோகிக்கப்படவேண்டும் என்ற சீரான திட்டங்கள் போடப்பட்டன. இவை யாவும் ஒரு யக்ஞம் போல, வேத வேள்வி போல நாடெங்கும் செய்ததற்கான கல்வெட்டுகள் ராஜராஜ சோழன் காலத்திலிருந்து ஏராளமாகக் கிடைத்துள்ளன.

எல்லாமே பெரிது என மேருமலையை மனதில் நினைத்துக் கட்டிய பெரிய கோயிலில், ராஜ ராஜன் நாற்பத்தெட்டு கந்தர்வ- கந்தர்விகளை (தேவாரம் பாடும் ஆண்களை கந்தர்வர்கள் என்றும் பெண்களை கந்தர்விகள் என்றும் அழைக்கப்பட்டனர்) திருப்பதியம் ஓதுவதற்கெனவே நியமித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாற்பத்தெட்டு ஓதுவார்களையும் மேற்பார்வை செய்ய ஒரு மேற்பார்வையாளர் (திருப்பதிய நாயகம்) நியமித்த கல்வெட்டும் தஞ்சைக் கோயில் கல்வெட்டு வரிசைகளில் உண்டு. இது மட்டுமா.. தேவாரப்பாடல்களுக்கும் பாடிய மூவர் முதலிகளுக்கும் போட்டிப் போட்டுக்கொண்டு சேவை செய்ய வந்த தகையோர் பலர் பற்றிய செய்திகள் தஞ்சைக் கோயில் கல்வெட்டில் காணலாம். தேவார மூவர் சிலையை எடுப்பித்தார் ஒருவர் என்றால் அவர்களுக்கு அணிந்து பார்க்க தங்க வைடூரிய நகைகளைக் கொடையாகக் கொடுத்தார் இன்னொருவர். சுந்தரரை மட்டும் வழிபட்டால் போதுமா, அவர் விரும்பிய பரவைநாச்சியாரையும் வணங்க வேண்டாமா, ஒரு சிறிய குறிப்பு

(The inscription recording the images of the saints states that the Chief Administrator of the temple Adittan Suryan alias Tennavan Muvendavelan, consecrated before the 29th year of the king, the images of (a) One solid image of Nambi Aruranar having two sacred arms and measuring seventeen viral and two torai in height from feet to the hair, (b) One solid image of Nangai Paravaiyar having two sacred arms and measuring sixteen viral in height, (c) One solid image of Thirunavukkaraiyar, having two sacred arms twenty-two viral and two torai in height, (d) One Thirujnana sambandadigal having two sacred arms twenty-two viral and two torai in height – Dr.Nagasami),

ராஜராஜன் மனதுக்கேற்ப பெரிய கோவிலில் உள்ள மூவர் சிலைகளும் பெரியவையே. அப்பரும் சம்பந்தரும் ஒரே அளவில் செய்யப்பட்டிருந்தாலும், சுந்தரர் மட்டும் சற்று அளவில் குறைந்ததாகக் காணப்படும், ஏனெனில் அவரது துணைவியார் பரவை நாச்சியாரோடு தோளோடு ஏதுவாக நிற்கவேண்டுமென உன்னிப்பாக திட்டம் போட்டு செய்யப்பட்டது. (SII Vol.II)

இது ஒரு தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டுமே என்பதல்லாமல் சோழ நாடெங்கும் (சோழ நாடென்பது தமிழ் பேசும் மண்ணெல்லாம் அன்று இருந்தது என்பதை நினைவில் கொள்க - ஈழம் உட்பட) உள்ள சிவத் திருக்கோயில்களில் தேவாரத்துக்கும் தேவாரம் பாடிய மூவர் முதலிகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜனே முன்னின்று தேவாரப்பாடல்கள் பாடி வணங்கினான என்றால் அடுத்த 130 ஆண்டுகள் கழித்து வரப்போகும் அநபாயக் குலோத்துங்கன் திருமறைக்காட்டில் (தற்போதைய வேதாரண்யம்) தானே பாடுவதாகவும் தன்னால் முடியாத நாட்களில் தனக்குப் பதிலாக தியாக சமுத்திர பிச்சன் என்போனை நியமித்து அந்த உத்தரவை திருமறைக்காடுக் கோவிலில் கல்வெட்டாகப் பதிவு செய்தான்.

அதைப்பற்றிக் கூறும் கல்வெட்டைப் பாருங்கள். "திருமறைக் காட்டு உடையார் மயேச்சுரகாணியும் இரண்டாவது முதல் நம் திருப்பதியம் பாடுவார்க்கு நாயகம் திருச்சிற்றம்பலமுடையான் நாகதேவனான தியாக சமுத்திர பிச்சனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கு குடுத்தோம்" என்பது கல்வெட்டின் வாசகம்.

வேதத்துக்கு இணையாக தெய்வத்தமிழில் பாடப்பட்ட திருமுறை முறையாகத் தொகுக்கப்பட்டு அவை சீரும் சிறப்பும் பெற வேண்டுமென்பது இறைவன் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்ற இறைவன் தன் செல்ல மகனான ராஜராஜனுக்காக நூறு நூற்றைம்பது ஆண்டுகள் காத்திருந்தானோ என்னவோ.. ராஜராஜனின் பெரிய கோவில் கட்டிய புகழை விட ராஜராஜனுக்கு மிகவும் ஆனந்தம் அளிக்கும் செயலாக திருமுறையை அவன் மூலம் முறைப்படுத்தி இறைவன் வகை செய்தார் என்றே சொல்லவேண்டும். இல்லாவிட்டால் ஈழம் முதல் கோதாவரி தீரம் வரை ஒரு குடை கீழ் ஆண்டு வந்தவன், அனைத்து அரசர்கட்கும் பேரரசனாய் அதிகாரம் செலுத்தியவன் தன் கடை நாட்களில் இறைவன் திருவடி நிழல் காண சிவபாதசேகரனாய் மாறி திருப்பதியம் பாடிக் கொண்டே இருந்து சிவன் அவன் திருவடி சேர்ந்து தெய்வமாகவே மாறிப்போவானா.. ஆம்.. அவனுக்குப் பின் வந்த அரசர்கள் ராஜராஜனைத் தெய்வமாகவே பாவித்து கோயிலில் சிலை செய்து ஆராதித்தனர்.

ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலுக்கு எல்லோரும் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எங்கே இருந்தாவது பயணம் செய்து செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உண்டு. ஆனால் திருமுறைப்படுத்தப்பட்ட தேவாரப் பாடல்களை நினைத்த மாத்திரத்தில் பாடி இறைவன் திருவருளைப் பெற முடியும் அல்லவா.. எத்தனை பெரிய செல்வத்தை மானிடர்கள் எளிய வகையில் பெற்றுப் பலன் பெற இந்த அரசன் மூலம் இறைவன் செய்வித்தான் என்றே தோன்றுகிறது அல்லவா.. ராஜராஜனுக்கு திருமுறைகண்ட சோழன் என்ற பெயர் வந்த விதமும் இந்தப் பட்டப்பெயர் கொடுத்த பொருளும் எத்தனை தெளிவாக உள்ளன பாருங்கள்.. இதோ அந்த திருமுறை கண்ட பெரியோனைப் போற்றி டாக்டர் நாகசாமி அவர்கள் கவிதை..

திருமுறை கண்ட பெரும் புகழ்ச்சோழ!
நின்பெயர் தமிழ் உளவரையும் திகழ்ந்திடும் அன்றோ!
திருப்பதி கங்கள் பண்ணுடன் இசைக்க
தென்தமிழ்நாடதில் எங்கும் திகழ்ந்திட
அன்று நீ அளித்தமை அன்றோ எம்மிடை
இன்றும் உளது! இவ்வரும் பாங்கே
என்றும் நிலைக்கும் என்னிடில் மிகையோ!
நித்த வினோத வாழ்த்தினம் நினையே!
சிவனடி மறவாச் செம்மல்! சிவபாதசேகர!
முத்தமிழ்ப் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ!
இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டே! 


ஆம்.. ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் திருமுறை கண்ட ராஜராஜனை நாமும் போற்றிக்கொண்டே இந்த தேவார ஏடுகள் தில்லைக் கோவிலில் மீட்கப்பட்டபோது நிகழ்ந்ததாக சொல்லப்படும் விஷயத்தில் கொஞ்சம் கவனத்தை செலுத்துவோம்..

படங்களுக்கு நன்றி: ஓம் சக்தி, கூகிளார்.
திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோவில் சிற்பங்கள் 1.பொள்ளாப்பிள்ளையார் ராஜராஜன் தந்த பிரசாதங்களை உண்ணுதல் 2. நாரை, ராஜராஜன், நம்பி சிற்பம்., 3. தஞ்சை கோயில் ராஜராஜன் திருவுருவச் சிலை.

8 Comments:

At 6:21 PM, Blogger Rajasankar said...

பொல்லாப்பிள்ளையாரை ராஜராஜன் பார்த்தது கேள்விப்படாதது. அரிய பல தகவல்களுக்கு நன்றி

 
At 10:18 PM, Blogger manoharan said...

பொல்லா பிள்ளையார் பற்றிய தகவல் மிகவும் அருமை. இதன் மூலம் நீ பொல்லா திவாகர் ஆகிவிட்டாய். அது சரி, எங்கிருந்து சேகரிக்கின்றாய் இப்படிப்பட்ட தகவல்கலை. நீ நீடூழி வாழ்க.

***மனோகர்***

 
At 5:29 AM, Blogger geethasmbsvm6 said...

அருமையான தகவல்கள். பொள்ளாப் பிள்ளையாரா? பொல்லாப் பிள்ளையாரா? பொள்ளாப் பிள்ளையார் தான் சரினு எண்ணுகிறேன். ராஜராஜனுக்கும் அவர் காட்சி கொடுத்து நிவேதனனங்களை உண்டது குறித்த வர்ணனையும், சிற்பமும் அருமை. ராஜராஜன் சிற்பத்தைத் தஞ்சைக் கோயிலில் பார்க்கவில்லை; தவற விட்டிருக்கேன். கிட்டத்தட்ட ஐந்தாறு முறை போயும் இது தெரியவில்லை. அடுத்த முறை போனால் பார்க்கணும். நன்றி.

 
At 5:29 AM, Blogger geethasmbsvm6 said...

தொடர

 
At 7:05 AM, Blogger VSK said...

திருமுறை கண்ட சோழனின் பெருமைகளை எத்தனை முறை படித்தாலும் இன்பமே! திரு. மறவன் புலவு அவர்கள் சொன்ன அந்தப் 'பரந்தகச் சோழன்' பற்றியும் சொல்லுவீங்கதானே? தருமபுரம் ஆதீனம், இவர்தான் திருமுறைகளைக் கண்டுபிடித்ததாகச் சொல்லியிருக்கிறாராமே?

 
At 8:27 AM, Blogger V. Dhivakar said...

“பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

 
At 8:31 AM, Blogger V. Dhivakar said...

டாக்டர்,
பராந்தக சோழன் வழி வந்த ராஜராஜனைத்தான் திருமுறைகண்ட சோழன் என்று டாக்டர் நாகசாமி முதற்கொண்டு பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். பராந்தகர் தேவாரப் பாடலுக்கு செய்த சேவை ஏராளம். ஆனால் தில்லையில் திருமுறை கண்ட அல்லது செய்த சோழன் ராஜராஜனே..

 
At 9:01 AM, Blogger பவள சங்கரி said...

அன்பின் திரு திவாகர் சார்,

மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ள அரிய தகவல்கள். படங்களும் சுவை கூட்டியுள்ளன. இன்னொரு முறை சென்று தரிசிக்க ஆவலைக் கூட்டியுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

 

Post a Comment

<< Home