Friday, November 25, 2011

கடலில் தள்ளப்பட்ட கப்பல்

தமிழர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் வல்லவர்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பதில் நமக்குப் பெருமை மிக அதிகம். இன்னமும் கூட பழம் பெருமைப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டி விடலாம் என்றுதான் நாம் இருக்கின்றோமே தவிர, அந்தப் பெருமை மிக்க பழங்காலம் திரும்பவும் வரவேண்டும் என்று யாரேனும் முயற்சி செய்கிறோமா என்றால் நிச்சயம் அவர்களை விரல் விட்டு எண்ணத்தான் வேண்டும். அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு மனிதரைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

இடம் சென்னையின் பெரிய ஹோட்டல்களில் ஒன்று, கலந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கணிசமான அளவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், அதிலும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பிரிட்டனின் தூதுவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி. முதலில் அவர்களுக்குத் தெரிந்த பல செய்திகளை, அவர்களும் நாமும் இருவருமாகக் கூட மறந்து போன பல செய்திகளை இந்த மகாமனிதர் பகிர்ந்து கொள்கிறார், அப்படிக் கூட இல்லை, அடிமையாகிக் கிடந்த நம் புத்தியின் மகிமையைத் தீட்டிக் கூர்மைப் படுத்த முயல்கிறார், அடிமையாக ஆட்டுவித்த அந்த பிரிட்டனின் அந்தக் காலத்து அநீதிகளை அவர்கள் முன்னேயே படம் பிடித்துக் காண்பித்து, எப்படியெல்லாம் உயரத்தில் இருந்த இந்தத் தமிழர்களும் இந்தியர்களும் ஒரு இரண்டு நூற்றாண்டுகளில் எப்படியெல்லாம் கீழ்மையாக ஆக்கப்பட்டு அடிமையாகக் கட்டுண்டுக் கிடந்தோம் என்பதையும் ஆழமாக பார்வையாளர் மத்தியில் பதிவு செய்கிறார்.

பண்டைய காலத்தில் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பே நாம் கடல்வணிகத்தில் எப்படியெல்லாம் முன்னேறி இருந்தோம், ரோமானியருடனும், கிரேக்க யவனரிடமும் எப்படியெல்லாம் வணிகத்தில் தொடர்போடு இருந்தோம், பண்டைய எகிப்தில் கிடைத்த பானை ஓட்டில் தமிழ்ப் பிரம்மி எழுத்து எப்படி அங்கே கிடைத்திருக்கும், அதே போல ரோமானிய மன்னர் பதித்த காசுகள் போல நாமும் எப்படியெல்லாம் காசுகளைப் பொறிப்பித்தோம், தமிழ் சீனத்தில் கல்வெட்டில் கிடைத்ததும் அங்கு உள்ள மங்கோலிய மன்னரை தமிழில் வாழ்த்திப் பாடி, கல்லில் பொறிப்பித்து கோயில் கட்டியது, பல்லவர்களும், சோழர்களும் எப்படியெல்லாம் கடல் வணிகத்தை வளப்படுத்தினர், ராஜேந்திர சோழன் சோழ வளநாட்டின் எல்லையை கடலுக்கும் அப்பாலும் எப்படியெல்லாம் விரிவுபடுத்தினான், எங்கேயோ ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தமிழன் தன் கால் தடத்தைப் பதித்ததோடல்லாமல் பெரிய கப்பல் மணியின் மேற்பரப்பில் கூட தம் மொழியைப் பதிப்பித்தான் என அவர் சொல்லச் சொல்ல சபையில் பலர் வியப்போடுதான் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதையும் இங்கே சொல்லிவிடவேண்டும்.

ஒரு இந்தியனோ அல்லது தமிழனோ தம் பெருமையைக் கூறவரும்போது நம்மவர்களே எதிர்ப்பார்கள். அதனால்தானோ என்னவோ, ஜப்பானியரான நோபோரு கரஷிமா’ வின் அறிக்கையை அங்கே படித்தார். “கீழைக் கடல் பிராந்தியத்தில் கிடைத்த ஏழு பழங்கல்வெட்டுகளில் கிடைத்த செய்திகளிலிருந்து தமிழர் வணிகம் எப்படி ஒரு ’கார்பொரேட் கல்சராக’ அந்தக் காலத்திலேயே இருந்தது என்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இந்த வணிகக்குழுக்கள் முறையாகவும் ஒற்றுமையாகவும் ஐந்நூற்றுவர், நாநாதேசிகள், மணிக்கிராமம் என்றெல்லாம் தமிழ்பெயர்கள் கொண்டு செயல்பட்டதை இந்த கீழை நாடுகளில் கண்டபோது தமிழர்கள் எப்படியெல்லாம் சிறந்து விளங்கினர் என்பது புரியும்” (Ancient and Medieval Commercial activities in Indian Ocean by Noboru Karashima).

வந்திருந்த விருந்தினர்கள் ஒருகாலத்தில் நம்மை ஆண்டு அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் என்பதும் அவர் மறந்து விடவில்லை, வந்தவர்களுக்கும் அதை ஞாபகப்படுத்தினார் போலும்.

வர்த்தகம் செய்ய கீழைக்கடற்கரை வந்த ஆங்கிலேயர், இந்நாட்டு மன்னர்களைப் பிரித்து, பின் அவர்கள் நாட்டையும் விலைக்கோ அல்லது வில்லத்தனமாகவோ வாங்கிய பின் நடத்திய கொடுமைகள் இந்தத் தலைமுறை ஆங்கிலேயருக்குத் எல்லோருக்கும் தெரியவேண்டும், என்பது அவர் பேச்சில் உறுதியாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு வரை நாம் கடலில் கலம் விட்டுக்கொண்டிருந்தோம் என்பதையும் நம் கடல் வணிகம் வரலாறு கடந்தது என்பதையும் ஆங்கிலேயர் மறக்கடிக்கச் செய்த மூளைச் சலவைத் திட்டங்களையும் சுட்டிக் காண்பித்தார்.

கி.பி. 1639 இல் தமிரால வெங்கடாத்திரி நாயக்கனிடமிருந்து மதராஸை விலைக்கு வாங்கியது
1646 இல் நேவிகேஷன் ஆக்ட் மூலம் இந்தியக் கடல் பிராந்தியத்தை தம் கட்டுக்குள் கொண்டு வர முயன்றது
1650 ஆலிவர் கிராம்வெல் அந்தச் சட்டத்தை இன்னமும் தீவிரமாக்கியது
1789 இல் கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கொண்டுவந்த ஒரு சட்டத்தால் பிரிட்டிஷார் அனுமதியின்றி எந்தப் படகும் கடலில் செல்ல இயலாது என்ற நிலைமை
1814 இல் வந்த சட்டம் இன்னும் கொடுமையானது. ஆங்கிலக் கப்பலில் பணிபுரியும் இந்தியர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகக் காட்டும் சட்டம் – இது இந்தியர்கள் பிற்காலத்தில் கடலில் மரக்கலம் செலுத்தக் கூட ஆட்கள் கிடையாது என்ற நிலையை உருவாக்கியது.
1875 இலிருந்து இஞ்ச்கேப் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் இந்திய மரக்கலங்களே இல்லாமல் செய்யச் செய்தது

இதனால் பல இந்திய மரக்கல உரிமையாளர் தம் தொழிலை விட்டு விட்டு வேறு அடிமை வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டதும், பின்னாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை தம்முடைய சுதேசிக் கப்பல் கம்பெனியை எத்தனையோ இடையூறுகளுக்கிடையேயும் ஸ்தாபன் செய்தாலும் அதைத் தொடர முடியாமல் கடனாளியாகி வஞ்சிக்கப்பட்டு சிறையில் கொடுமை செய்யப்பட்டதும் யார்தான் அறிய மாட்டார்கள்? (பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி தம் கப்பலில் பயணம் செய்பவர்கள் பிரயாணிகள் கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்று அந்தச் சமயத்தில் அறிவித்திருந்தார்கள் – தாம் நஷ்டமடைந்தாலும் எதிரி அடியோடு ஒழியவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்).

சிதம்பரனார் மட்டுமல்ல, அதே காலத்தில் ரவிந்தரநாத தாகூரில் சகோதரர் ஜ்யோதேந்திர நாத் கூட ‘பெங்கால் ஸ்டீம்ஷிப் கம்பெனி’ இப்படி ஆரம்பித்து நஷ்டத்தை ஈட்டினார். 1922 இல்தான் தமிழரும் வழக்கறிஞருமான பி.எஸ். சிவஸ்வாமி அய்யர் இனி இந்தியர்களும் கப்பல் தொழிலில் சமானமான இடத்தைப் பெறவேண்டுமென மேலவையில் ஒரு மசோதா கொண்டுவந்தார். இந்திய மாலுமிகள் முதலில் முறையான பயிற்சியைப் பெறவேண்டுமெனவும், ஆங்கிலேயருக்கு நிகரான கப்பல் தொழிலில் ஆரவத்துடன் ஈடுபடவேண்டுமெனவும் தீர்மானம் சட்ட வடிவம் பெற்றது. அதன் பிறகும் சிந்தியா கம்பெனிக்கு பிரிட்டிஷ் தொந்தரவு கொடுக்கச் செய்து அதை மூடவும் வைத்தது. ஆனாலும் எப்போதோ இழந்துவிட்ட ஒரு முக்கியமான அறிவை மறுபடியும் விதைக்க வைத்து அறுவடை செய்வது என்பது காலம் போகப் போகத்தானே தெரியும். அந்த அறுவடை கூட பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரே நடைபெற்றது. 1950 இல்தானே எஸ் எஸ் ஜலகோபால் சிங்கப்பூருக்கு இந்தியக் கொடியில் இந்திய காப்டனுடன் இந்திய மாலுமிகளோடு சென்ற முதல் கப்பல்.. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் இந்தியக் கப்பலானது பரிபூரண சுதந்திரத்தோடு வங்கக் கடலில் தவழ்ந்து முன்னேறியது.

இன்றும் கூட இந்தியாவில் நம் தேவைக்கேற்ப கப்பல் கட்டும் தொழிற்சாலைகளோ, சொந்தக் கப்பல்களோ கிடையவே கிடையாதுதான். 16ஆம் நூற்றாண்டு வரை தம் கப்பலில் கொடி கட்டிப் பறந்தவர்கள் இன்று பிறர் நடத்தும் கப்பல் கொடியில் கீழ்தான் இன்னமும் ஏராளமாக வேலை செய்கிறார்கள் என்பதும் ஒரு வருத்தமான செய்திதான்.

ஆனாலும் சரி, நம் பொருளாதாரத்தையும் கப்பல் அறிவுச் செல்வத்தையும் சேர்த்து சீரழித்த பெருங்குற்றம் ஆங்கிலேயர் மேல் ஆண்டாண்டு காலமாகத் தான் தொடுத்துக் கொண்டே இருப்போம்.. அதே சமயத்தில் நம் மண்ணின், மொழியின் பழம்பெருமை பேசிப் பேசியே காலத்தைப் போக்குவோம் என்றில்லாமல் நம் நாட்டின் பொது முன்னேற்றம் என்ற குறிக்கோளுடன் மனதிற் கொண்டு முன்னேறுவோமாக.. எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேறவேண்டும் என்ற உண்மை நிலையை நாம் உணரவேண்டும்.. உணர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே நம் பழம் பெருமையைக் காப்பவர்களாக நம்மை எதிர்காலம் சுட்டிக் காட்டும்.

இப்படி சபையே உணர்ச்சிக் கட்டத்தில் இருக்க வைத்து உரை நிகழ்த்தியவர் வேறு யாருமல்ல. கடலோடி திரு நரசய்யா அவர்கள்தான். உரையை முடித்ததும் அங்கிருந்த ஆங்கிலேய விருந்தினரிடம் கடைசியில் அவர் பணிவோடு சொன்னது.. “உங்களுக்கு இவை எல்லாம் கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் சரித்திரத்தை மாற்றி எழுதமுடியாதல்லவா.. இருந்தும் இந்தத் தலைமுறையினராக இருக்கும் உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை” இது நரசய்யா அவர்களின் பணிவு.

கடைசியில் அந்த இங்கிலாந்து துணைத் தூதுவர் மைக் அவர்களிடம் ஒரு விஷயம் கேட்டேன் ‘உங்கள் முன்னோர்களின் இத்தகைய கொடுமைகள் பற்றி இன்று உங்கள் காலத்தவருக்கு விவரமாகத் தெரியுமா என?” அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். “தெரியும்.. ஆனால் இப்போது நாங்கள் மிக மிக மென்மையானவர்கள். சில விஷயங்கள் அதுவும் கொடுமையான சட்டங்கள், ஆதிக்கவரலாறு இவையெல்லாம் படிக்க, கேட்க எங்களுக்கு இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது.. நாங்களா அப்படிச் செய்தோம் என்று”

என்ன இருந்தாலும் திரு நரசய்யா அவர்களின் நெஞ்சுரம் மிக்க இந்தப் பதிவு எத்தனையோ பேரை சிந்திக்க வைக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

22 Comments:

At 4:05 AM, Blogger Unknown said...

எம்டன் கப்பலில் செண்பகராமன் பிள்ளை பயணிக்கவே இல்லை என்பதை ஆதாரமாக வைத்து, நாவல் எழுதிய திவாகர், தமிழருக்காகப் ப்ரிந்து பேசுவதைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

 
At 4:30 AM, Blogger meenamuthu said...

கண்ணீரை வரவைத்த பதிவு. திரு நரசய்யா அவர்களை தாழ் பணிந்து வணங்குகிறேன்.

இவ்வளவு உன்னதமான நிகழ்ச்சியை பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் மனமிகுந்த நன்றி.

 
At 4:58 AM, Blogger ஏ.சுகுமாரன் said...

உன்னதமான பகிர்வு திவாகர் ,
மதிப்பிற்குரிய நரசையாவின் ஆய்வு வணக்கத்திற்க்குரியது.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
--

 
At 5:04 AM, Blogger geethasmbsvm6 said...

அருமையான நெகிழ்ச்சியான பதிவுக்கு நன்றி திவாகர். நரசையா அவர்களைத்தவிர வேறு யாரால் இப்படிக் கப்பலைப் பற்றிப் பேச முடியும்/ நீங்கள் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஊகித்தேன்.


@சீராசை சேதுபாலா,

செண்பகராமன் பிள்ளை கடலில் பயணிக்கவில்லை என்பது உண்மை என்பதால் தான் அதை ஆதாரமாக வைத்து நாவல் எழுதப்படது இல்லையா??

அதற்கும் திவாகர் தமிழருக்குப் பரிந்து பேசுவதாய் நீங்கள் குறிப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லை. உண்மையை உண்மையாகவே எடுத்துக்கொள்ளுங்கள். செண்பகராமன்பிள்ளையைப் பற்றி ஒரு சிறிது மாற்றி எழுதினால் தமிழரின் விரோதி என்பது சிரிப்பை வரவழைக்கிறது. :))))))))))))))

 
At 5:04 AM, Blogger geethasmbsvm6 said...

தொடர

 
At 5:10 AM, Blogger Ashwin Ji said...

எம் தமிழரின் மாண்பை புரிய வைக்கும் பதிவு. நன்றி திவாகர்ஜி.

 
At 5:23 AM, Blogger விருபா - Viruba said...

\\ கிண்கிணிக்கும் பூஜை மணியில் மேற்பரப்பில் கூட தம் மொழியைப் பதிப்பித்தான் \\

கப்பல் மணி என்பது வேறு, பூசை மணியென்பது வேறு. கப்பல் மணியைத் தூக்குவதற்கு ஒரவரால் முடியாது.

கூட்டத்தில் நிறையப்பேர் கப்பல் பார்த்துள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது.

 
At 5:29 AM, Blogger இன்னம்பூரான் said...

வரலாறு இவ்வாறு பதிவு ஆவது மகிழ்ச்சி தரும் நிகழ்வு. திரு.நரசய்யாவுக்கும், திரு.திவாகருக்கும் நமது நன்றி.

 
At 6:06 AM, Blogger duraian said...

ஐயாவின் உழைப்பிற்கும் அர்பணிப்புக்கும் முன் தலைவணங்கி நிற்கிறேன்

 
At 6:14 AM, Blogger பெருமாள் தேவன் செய்திகள் said...

திரு திவாகர் அவர்கள்,

தமிழர்கள் வெறுமனே வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்க வில்லை என்று வருத்தப்படாதீர்கள். அவர்கள் தங்களால் இயன்றவரை எந்தவித தடங்கலும் இன்றி பல்வேறு துறைகளில் சாதனைகள், ஆய்வுகளை செய்து வருகின்றனர். அவர்களது திறமையை வெளிக்காட்டும் நேரம் வரும்.

அருமையானதொரு கட்டுரையை வழங்கியமைக்கு நன்றி.

தேவன்

 
At 6:15 AM, Blogger திவாண்ணா said...

மாபெரும் மனிதர்!

 
At 7:27 AM, Blogger s gowtham said...

regards to shri. Narasayya and to u for making us to know something good about us.

 
At 7:30 AM, Blogger s gowtham said...

regards to shri.Narasayya and also to u for making us to read this proudy history.

 
At 8:38 PM, Blogger manoharan said...

நல்ல ஆய்வுகூர்ந்த கட்டுரை. ஆங்கிலேயர்கள் மாறியிருக்கிறார்களா? இதற்கு ஆய்வு அவசியம். கடலோடி நரசய்யா அவர்களுக்கு வணக்கங்கள். தொடரட்டும் நண்பா திவா உன் எழுத்து.

மனோகர்

 
At 7:22 AM, Blogger Vijay said...

http://www.flipkart.com/books/0043948424 - chola navigation package is a wonderful book - talks of a long lost navigation manual of the tamils - remanents remain in oral tradition in some islands - tradition is that i was copied by the arab sailors. How much we have lost but at times, what little we have is also too much for we do not value them

rgds
vj

 
At 8:11 AM, Blogger V. Dhivakar said...

மீனாம்மா, கீதாம்மா, சுகுமாரன், சந்திரா, மனோகர், விஜய், அஸ்வின் ஜி, சேதுபாலா,துரை, தேவன், பெரியவர் இன்னம்பூரான், கௌதம், டாக்டர் தி.வா அனைவருக்கும் நன்றி!

 
At 8:13 AM, Blogger V. Dhivakar said...

@விருபா: மணி விஷயத்தில் திருத்தியமைக்கு நன்றி! அது கப்பல் மணிதான்.

2. அந்தக் கூட்டம் கப்பல் சம்பந்தப்பட்ட கூட்டம், ஆகையினால் கப்பல் விஷயம் தெரிந்தவர்கள்தான் வந்திருந்தனர்.

 
At 8:18 AM, Blogger V. Dhivakar said...

@சீராசை சேதுபாலா: செண்பகராமன் பற்றிய உங்கள் கருத்தை மதிக்கிறேன். அதே போல நான் எழுதிய எம்டன் கதையை நீங்கள் முழுதும் படித்துவிட்டு எழுதினால் நன்றாக இருக்குமோ என்னவோ..

நான் தமிழருக்குப் பரிந்து பேசுவது பற்றிய குறிப்பு இந்த வம்சதாரவின் வலைப்பூவின் டைடிலிலேயே உள்ளது.

உங்கள் பதிவுக்கு நன்றி!

 
At 10:33 PM, Blogger Tamil Home Recipes said...

Mikavum arumai

 
At 2:49 AM, Blogger geethasmbsvm6 said...

ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடியும் படிச்சேன். அருமையான பகிர்வு.

 
At 8:47 AM, Blogger பவள சங்கரி said...

அன்பின் திவாகர்ஜி,

தங்களின் எம்டன் நாவலை மதிப்புரை செய்யும்போது, திரு நரசய்யா அவர்களின் முன்னுரையைப் பார்த்து மலைத்துப் போனேன்.. ஐயாவின் இந்த ஆயவுப் பணிகள் அதிசயிக்கத்தக்கவை. அற்புதமான பகிர்வு சார். மிக்க நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

 
At 11:59 PM, Blogger V. Dhivakar said...

கீதாம்மா, பவளா, கமலம் அனைவருக்கும் நன்றி!! மறுபார்வை பார்க்கும்போது திரு நரசையா அவர்களின் சேவை மேலும் ஒளிர்கிறது என்பதும் உண்மைதானே!

 

Post a Comment

<< Home