Friday, May 11, 2007

மதுரை - காலை முதல் மாலை வரை.

இதோ - இதுதானோ மதுரை.. ஐய்... எத்தனை பெரிய வாயிற்தூண்கள்.. மழைக்கால மேகங்கள் இதன் உச்சியை முட்டிகொண்டே செல்லுமோ.. வீதிகள்.. வைகை நதியைப் போலவே சாலைகளும் எத்தனை அகலமானவை?

நல்ல காலம்.. காலை ஏழு மணிக்கே உள்ளே நுழைந்துவிட்டோம்...அடாடா.. எத்தனை கூட்டம்.. எத்தனை கூட்டம்.. எல்லோரும் மதுரைவாசிகளா.. இல்லை..நம்மைப்போல புதிதாக ஊரைப் பார்க்க வந்திருப்பார்களோ.. எங்கு பார்த்தாலும் இப்படி ஜனக்கூட்டம் இருந்தால் நாம் எப்படி எளிதாக வேகமாக நடந்து போவதாம்? தோளோடு தோளோக இடித்துகொண்டே இப்படி எத்தனை நேரம்தான் நடக்கமுடியுமாம்? ஒரே இரைச்சல்.. ஓயாத கடலலை போல இரைச்சல்.. இந்த இரச்சலில் கூட இவர்களால் எப்படி மற்றவர் காது கேட்கும்படி பேச முடிகின்றதோ? நம் செவிகளுக்கு எதுவும் சரியாக விழவில்லை.. இவர்கள் இரைச்சல் போதாதென்று அதோ ஆங்காங்கே மத்தள மேளங்கள் சத்தம்.. கோலாகலம்..சின்ன சின்னக் கூட்டம்..அங்கங்கே யாரோ கெட்டியாகக் கத்திப்பேச எல்லோரும் ஆ வெனக் கேட்கிறார்களே..நமக்கேன் அங்கு வேலை.. நாம் வந்தது ஊரைச் சுத்திப் பார்க்க.. சற்றுக் கண்களுக்கு மட்டும் வேலை தருவோம்..நடக்கும் சகலத்தையும் பார்ப்போம்.

எங்கே பார்த்தாலும் உயர்ந்த கோபுரம் போல மாளிகைகள்..அண்ணாந்து பார்த்தால் ஒவ்வொரு மாளிகையிலும் ஒவ்வொரு தினுசான கொடிகள்.. அடே கீழே தெருவில் பாருங்களேன்.. எங்கே பார்த்தாலும் வரிசையாக கள்ளுக் கடைகள்தான். அங்கே எத்தனைக் கூட்டம்.. காலை வேளை என்று கூட பார்க்காமல் இப்படியா கண்மண் தெரியாமல் அருந்துவார்கள்.. அவர்கள் பாடும் பாட்டும் ஆட்டமும்..ஐய்யே..

அட.. இந்தக் கள்ளுக்கடைக்காரர்கள் கூட ஆளாளுக்கு ஒரு கொடி பறக்கவிட்டிருக்கிறார்களே.. இது என்ன கொடி கலாசாரமோ..

அப்படியும் இந்த சிறு வணிகர்களைப் பாருங்களேன்.. ஒரு கையில் கூடை நிறைய சாமானோடு அப்படியே தூக்கிக்கொண்டு இவர்கள் வணிகம் செய்யும் வகையே அலாதிதான்.. காய்கள்.. பூ..பழம்.. வெற்றிலை.. ஆஹா.. ஒவ்வொரு பொருளும் பார்ப்பதற்கே இவ்வளவு பசுமையாக இருக்கிறதே..இவர்கள் கூவி விற்கும் அழகே தனி.. தன்னைக் கடந்து செல்லும் யாரையும் விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..அட..அந்தப் பெண் என்ன அருமையாய் பேசி ஜாலம் செய்வது போல மயக்கி தன் கூடையில் உள்ள பூக்களையெல்லாம் அவர்கள் கையில் திணித்து வணிகம் செய்துவிட்டாள்! மதுரை மதுரைதான்.

அட!...இதென்ன அடாவடித்தனமாய் இருக்கிறது? தப தப வென வீரர்கள் வருகிறார்கள். ஈட்டியைப் பின்பக்கமாய் திருப்பி நடு வீதியில் உள்ள ஜனங்களையும், சிறு வணிகர்களையும் இப்படி கருணையே இல்லாமல் வீதியின் பாதையோரம் தள்ளுகிறார்களே..அட..சிறிய கால அவகாசத்தில் எப்படியோ சாலை மத்தியில் அகலமாய் வழி வைத்துவிட்டார்கள்... யாராவது பெரிய மனிதர்கள் வருகிறார்களோ...

ஆமாம்..அதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டே எத்தனை வேகமாக தேர்களும் குதிரைகளும் வருகின்றன.. அட சடுதியில் நம்மைக் கடந்து போய்விட்டதே.. அந்தக் குதிரை வீரர்கள் கண்கள்தான் எத்தனை சிவப்பு? ஒருவேளை இரவெல்லொம் குடித்திருப்பார்களோ என்னவோ..

அந்தக் குதிரைக்கும்பல் புயல் வேகத்தில் கடந்து போனாலும் இந்த ஜனக்கூட்டம்தான் பாவம் ஒரு கணத்தில் இறுக்கித் தள்ளி பயந்து போய் நம்மையும்தான் சேர்த்து தள்ளுகிறார்கள்.,. ஆனால் இதோ பாருங்களேன்.. அவர்கள் போனதும் இவர்களும் பழைய நிலைக்கு வந்து விட்டார்கள்..அதோ மறுபடியும் அந்த கூடைக்காரி..எதுவுமே நடவாதது போல இன்னொரு பூக்கூடையை வைத்துக் கொண்டு என்ன சாமர்த்தியமாக பேசுகிறாள்.. அட..அவள் பேச்சுக்கு மதி மயங்கி வாங்கும் அவனையும் பாருங்களேன்..ஆ வென வாயைக் காட்டி..விலையை குறைத்துக் கேட்கக்கூட தெம்பில்லாமல் அப்படியே அவள் கையைப் பற்றிக் கொண்டே வாங்கிக் கொள்கிறான்...

இப்படியே பார்த்துக் கொண்டே இந்த மதுரை வீதியில் நடந்து கொண்டே இருந்தால் போதும் பகல் பொழுது சட்டென போய்விடுகிறதே.. என்ன இருந்தாலும் மதுரை என்றால் மதுரைதான்.

---------------------------------------------------------------------

மேற்கண்ட கட்டுரை 'மதுரைக்காஞ்சி' என்ற சங்ககாலப் பாடலின் மூலம் வைத்து எழுதப்பட்டது. காலை முதல் மாலை வரை மதுரை இப்படி இருந்தது ..சரி.. மாலை முதல் காலை வரை எப்படி இருந்ததாம்?.. அதையும் அடுத்துப் பார்ப்போமே..

திவாகர்.

Labels: